Pages

Wednesday 1 August 2012

பெரியார்களின் கைகளை ,கால்களை முத்தமிடுதல் கூடுமா ?..


பெரியார்களின் கைகளை ,கால்களை முத்தமிடுதல் கூடுமா ?...........
_____________________________

இஸ்லாமியப் பெரியார்கள் என்று சிலரை எடுத்துக் கொண்டு, அவர்களின் கைகளை ,கால்களை முத்தமிடுவதையும் அவர்களின் பாதங்களைக் கழுவி விடுவதையும் சிலர் வழக்கமாகக் கொண்டுள்ளனர். இவ்வாறு செய்தால் அவரது ஆசி கிடைக்கும் என்று நம்புகின்றனர்.
மாற்று மதக் கலாச்சாரமான இக்காரியத்தை இஸ்லாத்தில் நுழைத்து விட்டு, இதற்கு மார்க்கத்தில் ஆதாரம் உள்ளது என்று கூறி சில ஆதாரங்களை எடுத்துரைக்கின்றனர். இந்த ஆதாரங்கள் செயல்படுத்துவதற்கு ஏற்றவையா? அதன் தரம் என்ன? என்பதை விரிவாகப் பார்ப்போம்.

அறியாமை வாதம்: 1
-----------------------------

நபி (ஸல்) அவர்களின் கைகளையும் கால்களையும் அப்துல் கைஸ் கூட்டத்தினர் முத்தமிட்டுள்ளனர். அதை நபிகளார் அங்கீகரித்துள்ளார்கள். இது தொடர்பாக அபூதாவூத் என்ற நூலில் ஆதாரம் உள்ளது.

நமது பதில்:

அப்துல் கைஸ் கூட்டத்தினர் நபிகளாரின் கையையும் காலையும் முத்தமிட்டதாக வரும் செய்தி இதோ: அப்துல் கைஸ் கூட்டத்தினரான நாங்கள் மதீனா வந்த போது எங்கள் வாகனத்திலிருந்து விரைந்து சென்று நபிகளாரின் கையையும் காலையும் முத்தமிட்டோம்.

அறிவிப்பவர்: ஸாரிவு (ரலி), நூல்: அபூதாவூத் (4548)

இதே செய்தி இமாம் புகாரி அவர்களின் அல்அதபுல் முஃப்ரத், அத்தாரிகல் கபீர், இமாம் தப்ரானியின் அல் முஃஜமுல் அவ்ஸத், அல் முஃஜமுல் கபீர், இமாம் பைஹகீ அவர்களின் ஸுனனுல் குப்ரா, ஷுஅபுல் ஈமான் ஆகிய நூல்களில் இடம் பெற்றுள்ளது.

அனைத்து நூல்களிலும் உம்மு அபான் பின்த்துல் வாஸிஃ என்ற பெண்மணி இடம் பெறுகிறார். இவரை எந்த ஹதீஸ் கலை அறிஞரும் நம்பகமானவர் என்று கூறவில்லை. எனவே இந்தச் செய்தி பலவீனம் அடைகிறது. மேலும் இந்த ஒரு வழியில் தவிர வேறு வழியில் அறிவிக்கப்படவில்லை. எனவே இச்செய்தி மேலும் பலவீனம் அடைகிறது. இச்செய்தியை உம்மு அபானிடமிருந்து அறிவிப்பவர் மதர் பின் அப்துர்ரஹ்மான் என்பவர் மட்டுமே என்பதும் குறிப்பிடத்தக்கது.

காலில் விழுவது என்பது இஸ்லாத்தின் கலாச்சாரம் இல்லை. மாற்று மதத்தவர்களின் கலாச்சாரம். இவற்றைப் பின்பற்றுவது மாற்று மதக் கலச்சாரத்தைப் பின்பற்றுவதைப் போலாகும்.

மாற்று மத நடைமுறைகளைப் பின்பற்றுபவன் அந்த மதத்தைச் சார்ந்தவன் (நூல்: பஸ்ஸார்) என்ற நபிமொழியும் இவற்றை கடுமையாகக் கண்டிக்கிறது. அறியாமை

அறியாமை வாதம்: 2
-----------------------------

நபி (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து, அல்லாஹ்வின் தூதரே! என் நம்பிக்கையை அதிகமாக்கும் ஒரு விஷயத்தை எனக்குக் கற்றுக் கொடுங்கள் என்று கேட்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள் அந்த மரத்தை அழை என்றார்கள். அவர் அழைத்தார். அந்த மரம் வந்து நபி (ஸல்) அவர்களிடம் ஸலாம் கூறியது. பின்னர், நீ சென்று திரும்பிச் செல் என்றார்கள். அது சென்று விட்டது. அப்போது அந்த மனிதர் தலையையும் காலையும் முத்தமிட அனுமதி கேட்டார். நபிகளார் அனுமதியளித்தார்கள். அவர் நபிகளாரின் தலையையும் காலையும் முத்தமிட்டார்.

அறிவிப்பவர்: புரைதா (ரலி), நூல்: ஹாகிம் (7326)

நபிகளாரின் காலை முத்தமிடத் தெளிவான அனுமதியை இந்த ஹதீஸில் நபிகளார் தந்துள்ளதால் பெரியார்கள் காலை முத்தமிடுவது எந்த வகையிலும் குற்றமில்லை என்று வாதிடுகின்றனர்.

நமது பதில்:

இதே செய்தி தலாயின் நுபுவா - அபூ நுஐம், முஸ்னத் ரவ்யானீ ஆகிய நூல்களிலும் இடம் பெற்றுள்ளது. அனைத்து நூல்களிலும் ஸாலிஹ் பின் ஹைய்யான் என்பவர் இடம் பெற்றுள்ளார் இவர் பலவீனமானவராவார்.

இவர் விஷயத்தில் ஆட்சேபணைகள் உள்ளன என்று இமாம் புகாரி கூறியுள்ளார்கள். (அத்தாரிகுல் கபீர், பாகம்: 4, பக்கம்: 275)

இவரை இமாம் இப்னு மயீன் பலவீனமானவர் என்று கூறியுள்ளார்கள். (தாரீக் இப்னு மயீன், பாகம்: 1, பக்கம்: 133)

இவர் நம்பகமானவர் இல்லை என்று இமாம் நஸயீ குறிப்பிட்டுள்ளார்கள். (அல்லுஅஃபாவு வல்மத்ரூகீன், பாகம்: 1, பக்கம்: 57)

நம்பகமானவர்கள் பெயரைப் பயன்படுத்தி உறுதியற்ற செய்திகளை அறிவிப்பவர் என்று இமாம் இப்னு ஹிப்பான் அவர்கள் கூறியுள்ளார்கள். (அல் மஜ்ரூஹீன், பாகம்: 1, பக்கம்: 369)

இதைப் போன்று ஹாகிமில் இடம் பெறும் மற்றொரு அறிவிப்பாளர் ஹப்பான் பின் அலீ என்பவரும் பலவீனமானவரே!

ஹப்பான் பின் அலீ என்பவர் பலவீனமானவர் என்று இமாம் புகாரி கூறியுள்ளார்கள். (அத்ததாரீகுல் கபீர், பாகம்: 3, பக்கம்: 88)

அபூஸுர்ஆ அவர்கள், இவர் பலவீனமானவர் என்று கூறியுள்ளார்கள். (அல்ஜரஹு வத்தஃதீல் பாகம்: 3, பக்கம்: 270)

இவருடைய செய்திகளை எழுதிக் கொள்ளலாம். ஆனால் ஆதாரத்திற்கு ஏற்றவர் இல்லை என்று இமாம் ராஸீ அவர்கள் கூறியுள்ளார்கள். (அல்ஜரஹு வத்தஃதீல் பாகம்: 3, பக்கம்: 270)

இமாம் தஹபீ அவர்கள் இவரை பலவீனமானவர் என்று கூறியுள்ளார்கள். (அல்காஷிஃப், பாகம்: 1, பக்கம்: 307)

முஸ்னத் ரவ்யானீ என்ற நூலில் இடம் பெறும் செய்தியில் முஹம்மத் பின் ஹுமைத் பின் ஹய்யான் என்பவர் இடம் பெற்றுள்ளார். இவரை சிலர் நல்லவர் என்று கூறியிருந்தாலும் ஏராளமான அறிஞர்கள் இவரைப் பொய்யர் என்று குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் கேட்கும் செய்திகளில் மாற்றம் செய்து அறிவிப்பவர் என்றும் பலவீனமானவர், நம்பகமானவர் இல்லை என்றும் விமர்சனம் செய்துள்ளனர். (நூல்: தஹ்தீபுத் தஹ்தீப், பாகம்: 9, பக்கம்: 111)

எனவே இந்தச் செய்தியை ஆதாரமாகக் கொண்டு பெரியார்களின் காலை முத்தமிடலாம் என்று கூற முடியாது.

அறியாமை வாதம்: 3
-----------------------------

இவ்வூரில் குடியிருங்கள்! விரும்பியதை இதில் உண்ணுங்கள்! மன்னிப்பு எனக் கூறுங்கள்! ஸஜ்தா செய்து வாசல் வழியாக நுழையுங்கள்! உங்கள் தவறுகளை உங்களுக்கு மன்னிப்போம். நன்மை செய்வோருக்கு அதிகமாக வழங்குவோம் என்று அவர்களுக்குக் கூறப்பட்டதை நினைவூட்டுவீராக! (அல்குர்ஆன் 7:161)

இந்த வசனத்தில் பனு இஸ்ராயில்கள், பைத்துல் மக்தஸிற்குச் செல்லும் போது ஸஜ்தா செய்து போக வேண்டும் என்று அல்லாஹ் கட்டளையிட்டுள்ளான். பைத்துல் மக்தஸ் என்ற இடம் இறைத்தூதர்கள் வாழ்ந்த பூமியாக இருந்ததால் அந்த இடத்திற்குக் கண்ணியம் வழங்கும் விதமாக அதற்கு ஸஜ்தா செய்து கொண்டு போக வேண்டும் என்று அல்லாஹ் கட்டளையிட்டுள்ளான். எனவே நல்லடியார்களை கண்ணியம் செய்யும் விதமாகக் கால்களை முத்தமிடலாம்.

நமது பதில்:

இவ்வூரில் குடியிருங்கள்! விரும்பியதை இதில் உண்ணுங்கள்! மன்னிப்பு எனக் கூறுங்கள்! ஸஜ்தா செய்து வாசல் வழியாக நுழையுங்கள்! உங்கள் தவறுகளை உங்களுக்கு மன்னிப்போம். நன்மை செய்வோருக்கு அதிகமாக வழங்குவோம் என்று அவர்களுக்குக் கூறப்பட்டதை நினைவூட்டுவீராக! (அல்குர்ஆன் 7:161)

இந்த வசனத்தை எடுத்து வைத்து வாதிடுபவர்கள் பல தவறுகளை இதில் செய்துள்ளார்கள்.

1. இவ்வூரில் குடியிருங்கள் என்ற வசனத்தில் கூறப்படும் ஊர் பைத்துல் மக்திஸ் தான் என்பதற்கு எந்தச் சான்றும் குர்ஆனிலோ ஹதீஸிலோ கூறப்படவில்லை. சில திருக்குர்ஆன் விரிவுரை நூல்களில் மட்டுமே கூறப்பட்டுள்ளது. மேலும் சிலர் எகிப்து என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.

2. அந்த ஊரில் ஸஜ்தா செய்த வண்ணம் செல்லுங்கள் என்று அல்லாஹ் கூறியது, அது இறைத்தூதர்கள் வாழ்ந்த இடம் என்பதால் தான் என்ற கருத்து முற்றிலும் கற்பனையானது. அதற்கு எந்த ஆதாரமும் கிடையாது.

3. ஸஜ்தா செய்து வாசல் வழியாக நுழையுங்கள்! என்பதில் உள்ள ஸஜ்தா என்பதற்கு, நாம் தொழுகையில் செய்யும் ஸஜ்தா என்று பொருள் கொள்வது பொருத்தமற்றது. ஏனெனில் இரண்டு கைகள், இரண்டு கால்கள், இரண்டு மூட்டுகள், நெற்றி, மூக்கு ஆகிய எட்டு உறுப்புகள் தரையில் படும் வண்ணம் வாசல் வழியாக யாரும் செல்ல முடியாது. எனவே இங்கு பணிவு என்ற பொருளையே கொள்ள வேண்டும். ஸஜ்தாவின் அடிப்படைக் கருத்தும் பணிவை எடுத்துக் காட்டுவதே!

ஆக, இவர்கள் எடுத்துக் காட்டிய இந்த வசனத்தில் பெரியார்கள் காலில் விழலாம் என்பதற்குச் சிறிதும் ஆதாரம் இல்லை. பல இடங்களில் நாடோடிகளாகச் சுற்றிய பனு இஸ்ராயில் சந்ததியினருக்கு ஓர் ஊரை அல்லாஹ் இருப்பதற்கு வழங்கிய போது அங்கு பணிவுடன் செலுங்கள், படைத்தவனிடம் பாவமன்னிப்புக் கேளுங்கள் என்பது தான் அந்த வசனத்தின் கருத்தாகும்.

இறைத்தூதர்கள் வாழ்ந்த காரணத்தால் அங்கு ஸஜ்தா செய்ய வேண்டும் என்று கூறுபவர்கள் இன்றும் அவ்வாறு செய்வார்களா? நபிகளார் வாழ்ந்த போது மக்கா, மதீனாவுக்குச் சென்று, வந்த பாதைகள் அனைத்திலும் ஸஜ்தா செய்து வருவார்களா? மேலும் இவ்வுலகில் எத்தனையோ பகுதிகளில் நபித்தோழர்கள் வந்து சென்றுள்ளார்கள். அந்தப் பகுதிக்குச் செல்லும் வாசலில் ஸஜ்தா செய்தே செல்வார்களா? அவ்வாறு செய்யுமாறு மற்றவர்களுக்குக் கட்டளையிடுவார்களா?

அறியாமை வாதம்: 4
-----------------------------

நாம் இந்த இறைத்தூதரிடம் சென்று (சில) கேள்விகளைக் கேட்டு வருவோம் என்று இரண்டு யூதர்களில் ஒருவர் மற்றொருவரிடம் கூறினார். அதற்கு அவர், நீ (அவரை) இறைத்தூதர் என்று கூறாதே! ஏனெனில் நீ இறைத்தூதர் என்று கூறியதை அவர் கேட்டுவிட்டால் அவருக்கு நான்கு கண்கள் வந்து விடும் (அதாவது அதிகம் பூரிப்படைந்து விடுவார்) என்று கூறி விட்டு நபிகளாரிடம் சென்றார்கள். நாம் மூஸாவுக்குத் தெளிவான ஒன்பது சான்றுகளை வழங்கினோம் (17:101) என்ற வசனத்தின் விளக்கத்தைப் பற்றிக் கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் (ஒன்பது சான்றுகளையும்) விளக்கினார்கள்: 1. அல்லாஹ்வுக்கு எதையும் இணையாக்காதீர்கள்! 2. விபச்சாரம் செய்யாதீர்கள் 3. அல்லாஹ் தடை செய்த எந்த உயிரையும் நியாயம் இன்றி கொல்லாதீர்கள் 4. திருடாதீர்கள் 5. சூனியம் செய்யாதீர்கள்! 6. தவறிழைக்காதவனுக்கு எதிராக அவனைக் கொல்ல வேண்டும் என மன்னனிடம் முறையிடாதீர்கள்! 7. வட்டியை உண்ணாதீர்கள். 8. கற்பொழுக்கமுள்ள பெண்கள் மீது அவதூறு கூறாதீர்கள். 9. போர்க்களத்திலிருந்து புறமுதுகிட்டு ஓடாதீர்கள் என்று கூறிவிட்டு, சனிக்கிழமை வரம்பு மீறாதீர்கள் என்ற கட்டளை யூதக் கூட்டத்தினரே! இது உங்களுக்கு மட்டும் குறிப்பானதாகும் என்று விளக்கம் அளித்தார்கள். இதை கேட்டுக் கொண்டிருந்த இரண்டு நபர்களும் நபிகளாரின் கைகளையும் கால்களையும் முத்தமிட்டார்கள். மேலும் நீங்கள் இறைத்தூதர் தான் என்று நம்புகிறோம் என்று கூறினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், நீங்கள் இருவரும் இஸ்லாத்தை ஏற்பதை தடுத்தது எது? என்று கேட்டார்கள். நபி தாவூத் (அலை) அவர்கள் தன்னுடைய சந்ததிகளில் நபி இருந்து கொண்டே இருக்க வேண்டும் என பிரார்த்தனை செய்தார்கள். மேலும் நாங்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டால் எங்களை யூதர்கள் கொன்று விடுவார்கள் என்று நாங்கள் அஞ்சுகிறோம் என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: ஸஃப்வான் பின் அஸ்ஸால் (ரலி)

நூல்கள்: திர்மிதி (2657, 3069), இப்னுமாஜா (3695)

யூதர்கள் இருவர் நபியவர்களின் கால்களை முத்தமிட்டதை நபிகளார் கண்டிக்காமல் அங்கீகரித்துள்ளதால் பெரியார்களின் கால்களில் வீழ்வது குற்றம் இல்லை. மாறாக நல்ல வழிமுறையாகும் என்று வாதிடுகின்றனர்.

நமது பதில்:

நஸயீ, ஹாகிம், ஸுனனுல் குப்ரா, பைஹகீ, முஸ்னத் தயாலிஸீ, தப்ரானீ-கபீர், தலாயினுந் நுபுவா-பைஹகீ ஆகிய நூல்களிலும் இந்தச் செய்தி இடம் பெற்றுள்ளது.

ஆனால் இந்தச் செய்தி ஆதாரப்பூர்வமான செய்தி இல்லை. இந்தச் செய்தி இடம் பெறும் அனைத்து நூல்களிலும் இரண்டாவது அறிவிப்பாளராக இடம் பெற்றுள்ள அப்துல்லாஹ் பின் ஸலிமா என்பவர் பலவீனமானவராவார். அவர் தொடர்பான விமர்சனத்தைக் காண்போம்.

அப்துல்லாஹ் பின் ஸலிமா அவர்கள் வயது முதிர்ந்த காலத்தில் எங்களுக்கு அறிவித்தார். அதில் ஏற்றுக் கொள்ளக் கூடியவைகளும் மறுக்கப்பட வேண்டிவைகளும் இருந்தன என்று அம்ர் பின் முர்ரா அவர்கள் குறிப்பிட்டார்கள். (நூல்: அல்இலல் வ மஃரிபத்துர் ரிஜால், பாகம்: 2, பக்கம்: 147)

அப்துல்லாஹ் பின் ஸலிமா அவர்கள் வயது முதிர்ந்து (தடுமாற்றம் கண்டார்) அவரது ஹதீஸ்களை வலுவூட்டும் செய்திகள் கிடையாது என்று இமாம் புகாரி கூறுகிறார்கள். (அத்தாரிகுல் கபீர், பாகம்: 5, பக்கம்: 99)

அப்துல்லாஹ் பின் ஸலிமா அவர்கள் தவறிழைக்கக் கூடியவர் என்று இப்னு ஹிப்பான் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். (ஸிகாத் லி இப்னு ஹிப்பான், பாகம்: 5, பக்கம்: 12)

அப்துல்லாஹ் பின் ஸலிமாவிடத்தில் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டிய செய்திகளும் மறுக்கப்படவேண்டிய செய்திகளும் உள்ளன என்று இமாம் ராஸி குறிப்பிட்டுள்ளார்கள். (அல்ஜர்ஹு வத்தஃதீல், பாகம்: 5, பக்கம்:73)

அலாயி அவர்கள், இவரை மூளை குழம்பியவர் பட்டியலில் சேர்த்துள்ளார்கள். (அல்முக்தலிதீன், பாகம்: 1, பக்கம்: 63)

காலை முத்தமிட்டார்கள் என்ற செய்தியை இமாம் உகைலீ அவர்கள் தமது நூலில் பலவீனமானவர்களிடம் இடம் பெறச் செய்துள்ளார்கள். (லுஅஃபாவுல் கபீர், பாகம்: 2, பக்கம்: 60)

இந்த விமர்சனங்களைப் படிக்கும் போது அப்துல்லாஹ் பின் ஸலிமா கடைசிக் காலத்தில் மூளை குழம்பி, தவறான செய்திகளையும் அறிவித்துள்ளார் என்பது தெளிவாகிறது. மேலும் காலில் முத்தமிட்டார்கள் என்ற செய்தியை அப்துல்லாஹ் பின் ஸலிமா என்பவரிடமிருந்து அறிவிக்கும் அம்ர் பின் முர்ரா என்பவரே, அவர் எங்களிடம் மறுக்கப்பட வேண்டிய செய்திகளையும் அறிவித்துள்ளார் என்று தெளிவாகக் குறிப்பிட்டுள்ளதால் இந்தச் செய்தி மேலும் பலவீனம் அடைகிறது. மேலும் இந்தச் செய்தியை வலுவூட்டும் வண்ணம் எந்தச் செய்தியும் இல்லாமல் அப்துல்லாஹ் பின் ஸலிமாவிடமிருந்து அம்ர் பின் முர்ரா மட்டுமே அறிவித்துள்ளதால் இந்தச் செய்தி மேலும் பலவீனம் அடைகிறது.

தனித்து அறிவிப்பவர்களில் அப்துல்லாஹ் பின் ஸலிமாவிடமிருந்து அம்ர் பின் முர்ரா தவிர வேறு எவரும் அறிவிக்கவில்லை என்று இமாம் முஸ்லிம் அவர்களும் இப்னு மயீன் அவர்களும் குறிப்பிட்டுள்ளார்கள். (அல்முன்ஃபரிதாது வல் உஹ்தான், பாகம்: 1, பக்கம்: 251, தாரிக் இப்னு மயீன், பாகம்: 3, பக்கம்: 348)

அப்துல்லாஹ் பின் ஸலிமா அவர்கள் மூளை குழம்பிய நிலையில் அறிவித்தவை எவை? நல்ல நிலையில் அறிவித்தவை எவை? என்ற விவரங்கள் இல்லை. இதனால் தான் அப்துல்லாஹ் பின் ஸலிமா அறிவித்த செய்தியை இமாம் ஷாஃபீ அவர்கள் ஆதாரப்பூர்வமானது என்று கூறாமல் நிறுத்தி வைத்துள்ளார்கள்.

அப்துல்லாஹ் பின் ஸலிமா அவர்கள் இடம் பெறும் செய்தியை இமாம் ஷாஃபீ அவர்கள் ஆதாரப்பூர்வமானது என்று கூறாமல் நிறுத்தி வைத்துள்ளார்கள் என்று இமாம் பைஹகீ அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். (மஃரிபத்துஸ் ஸுனன் வல் ஆஸார், பாகம்: 1, பக்கம்: 256)

இந்தச் செய்தி மூளை குழம்பிய நிலையில் அறிவித்தவை தான் என்பதற்கு அந்தச் செய்தியிலேயே ஆதாரமும் உள்ளது.

நாம் மூஸாவுக்குத் தெளிவான ஒன்பது அத்தாட்சிகளை வழங்கினோம் (17:101) என்ற வசனத்தின் விளக்கத்தைத் தான் அந்த யூதர்கள் கேட்கிறார்கள். ஆனால் நபி மூஸா (அலை) அவர்களுக்கு வழங்கப்பட்ட ஒன்பது அற்புதங்களைக் கூறாமல் ஒன்பது அறிவுரைகளை நபி (ஸல்) கூறியதாக இடம் பெற்றுள்ளது. அப்துல்லாஹ் பின் ஸலிமாவிடம் ஏற்பட்ட குழப்பம் தான் என்பதற்கு இது தெளிவான சான்றாகும். இதை விளக்கமாக இமாம் இப்னு கஸீர் அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளார்கள்.

இந்தச் செய்தி சிக்கலை ஏற்படுத்தும் செய்தியாகும். அப்துல்லாஹ் பின் ஸலிமாவின் மனனத் தன்மையில் கோளாறு உள்ளது. ஹதீஸ் கலை அறிஞர்கள் இவரை விமர்சனம் செய்துள்ளனர். பத்துக் கட்டளைகளை ஒன்பது அத்தாட்சிகள் என்று குழப்பியுள்ளார். இந்தச் செய்தியில் கூறப்படுவது தவ்ராத்தின் அறிவுரைகளாகும். இது பிர்அவ்னுக்கு எதிராக நிற்கும் அத்தாட்சிகள் இல்லை என்று இமாம் இப்னு கஸீர் குறிப்பிட்டுள்ளார்கள். (தப்ஸீர் இப்னு கஸீர், பாகம்: 5, பக்கம்: 125)
__________________________________
Jazakallah : onlinepj.com

No comments:

Post a Comment